Saturday, November 15, 2008

சட்டம்?

தற்போது பதிவுலகம் முழுவதும் பரபரப்பாக அலசப்பட்டு வரும் விஷயம் சட்டக்கல்லூரி மாணவர் விவகாரம். வேண்டிய மட்டும் அணைவரும் கருத்து சொல்லியாயிற்று. அதானால் நானும் இதில் மூக்கை நுழைக்கப் போவதில்லை.

என்ன காரணத்துக்காக சண்டை நடந்தது என்பது இப்போதைக்கு தேவையில்லாத விஷயம். ”ஒருவன் செய்தால் குற்றம், நூறுபேர் செய்தால் கலவரம்” என்று பழைய எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் ஒரு வசனம் கேட்டதாய் ஞாபகம். அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது, அவ்வளவும் வீடியோ ஆதாரங்களுடன்! அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இருபத்தி ஐந்து தனிப்படைகள் தேடிக் கொண்டிருக்கிறது. அடித்தவர்கள் குற்றவாளிகள், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அடிபட்டு மருத்துவமணையில் இருப்பதாலேயே அடிபட்டவர்கள் யோக்கியர்கள் என்றாகிவிடாது. வழக்குப் போடுவதாக இருந்தால் அவர்கள் மீதும் போட வேண்டும்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்கு வெறும் வார்த்தை அளவில் ஆதரவு தெரிவித்ததற்கே வை.கோ., சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, கொலைவெறியோடு கையில் ஆயுதங்களுடன் அலைந்த இவர்களும் கைது செய்யப்பட வேண்டுமா, இல்லையா?

இந்த நாட்டில் பாஸ்போர்ட் வேண்டி ஒருவர் விண்ணப்பித்தால், அவருடைய குற்றப்பின்னணி என்ன என்பது விசாரித்து அறியப்படாமல் அவருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை. நாட்டை விட்டு வெளியே போகிற ஒருவனுடைய குற்றப்பின்னணியே விசாரிக்கப்படும்போது, நாட்டின் நீதி பரிபாலனத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் தகுதியுடன் கல்லூரியை விட்டு வெளியே வரும் புதிய வழக்கறிஞர்களின் குற்றப்பின்னணியும் அவர்கள் பணியில் சேருவதற்கு முன்பு விசாரித்து அறியப்பட வேண்டும். அப்படி குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தால், நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு அதை ஒரு தகுதி இழப்பாகக் கருத வேண்டும். குறைந்தபட்சம் சட்ட மாணவர்கள் இதை எண்ணியாவது அடக்கி வாசிக்கலாம்.

இவ்விவகாரம் ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் நோக்கிலேயே ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுவதாகத் தோண்றுகிறது. காவல் துறை இவ்விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருந்தால், இதே உடகங்கள் இவ்விவகாரத்தை “போலீஸ் அராஜகம்” என்று சொல்லியிருக்கும். இவர்களுக்குத் தேவை செய்தி, அதற்கு எவன் செத்தாலும், யார் யாரை சாகடித்தாலும் இவர்களுக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. இப்படிச் சொல்வதாலேயே காவல் துறை நடந்துகொண்ட விதம் சரி என்று சொல்ல வரவில்லை. முன்னரே தகவல் கிடைத்தும் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததும் கண்டணத்திற்குரியதே.இவ்விவகாரத்தைக் காரணம் காட்டி இன்று நீதிமன்றங்களைப் புறக்கணித்த வழக்கறிஞர்களின் செயலும் பொறுப்பற்றதே.